

கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் அவசர, அவசரமாக கடலில் வீசிய வலைகளை இழுத்து, கரைக்கு திரும்பினர்.
வங்க கடலில் உருவாகி உள்ள முரசு தீவிர புயல் நாளை மறுநாள்(3-ந்தேதி) ஆந்திராவில் கரையை கடக்கிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதிய புயல் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு உள்ளது. பல அடி உயரத்திற்கு அலைகள் சீறி எழுகின்றன.
இன்று காலை மாமல்லபுரம், தேவநேரி, வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதிகளில் இருந்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குகள் படகுகளில் மீன்பிடிக்க சென்று இருந்தனர். இன்று காலை முதல் கருமேகங்களுடன் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் அவசர, அவசரமாக கடலில் வீசிய வலைகளை இழுத்து, கரைக்கு திரும்பினர்.
மீனவர்கள் வீசிய வலைகளில் சங்கரா, சிறு திருக்கை, நாக்கு மீன் போன்ற சின்ன வகை மீன்களும், நண்டுகளுமே பிடிபட்டு இருந்தன. பெரியவகை மீன்கள் எதுவும் சிக்கவில்லை. மேலும் வலைகளிலும் அதிக மீன்கள் சிக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.