

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையான கப்பலூர் சிட்கோவில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தனியாக தீயணைப்பு நிலையம் மற்றும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என தொழிற்பேட்டை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைத்து இயக்கி வருகின்றன. அதே சிட்கோவில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
சுமார் 15,000 சதுர அடி பரப்பில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட இந்த குடோனில், இங்கிலர்நது உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட காட்டன் பைகள், காட்டன் துண்டுகள், பஞ்சுகள் மற்றும் 2 கார்டிங் செட் மெஷின்கள், ஏராளமான தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று இரவு 9 மணியளவில் பலத்த இடி, மின்னல் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் பணியாளர்கள் வேலையை முடித்துவிட்டு புறப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக குடோனில் ஒரு பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது குடோனில் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த காவலாளிகள் மின் விளக்கு அணைந்து மின் கசிவு போல் தெரிந்ததை பார்த்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சிறு தீப்பொறி பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தீயணைப்பான் கொண்டு அணைக்க முயன்றும் முடியவில்லை. நேரம் செல்லச்செல்ல பஞ்சு மற்றும் நூல் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி மொத்த குடோனையும் சூழ்ந்தது. இதில் வெப்பத்தின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த குடோனின் ஆஸ்பெஸ் டாஸ் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து சீட்டுக்கட்டு போல் சரிந்தது.
உடனடியாக காவலாளிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதற்கிடையே இடைவிடாது பெய்த தொடர் மழையிலும், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து நிறுவனத்தை சேர்ந்த பால வேலாயுதம் கூறுகையில், விபத்து ஏற்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குருவாயூர் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர் போனில் தகவல் வந்ததும் வந்து பார்த்தோம். ஏற்றுமதிக்கான காட்டன் பொருட்கள், எந்திரங்கள் என அனைத்தும் எரிந்து விட்டது. குறைந்தபட்சம் ரூ.5 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையான கப்பலூர் சிட்கோவில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தனியாக தீயணைப்பு நிலையம் மற்றும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என தொழிற்பேட்டை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.