

முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.
தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.
முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 2-ந்தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2 தொகுதிகளிலும் அவர் தங்கியிருந்து ஒரு வாரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது.
தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.