

லாரி டிரைவர் தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்படும். சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, வாலாந்தூர் கண்மாய் கரை அருகே வாகனத்தில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாகனத்தில் இருந்த சரக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இறந்தவரால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் தற்செயலான தீ விபத்து தொடர்பான பிரிவுகளின் கீழ் குற்ற எண் 113/2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பாக, பாலகிருஷ்ணன் வழக்குடன் தொடர்புடைய சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிக்கு உதவ செக்கனூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆரம்பகட்ட தகவலின்படி, இறந்த நபர் காவல் ஆய்வாளரின் அறையில் இருந்த போது, காலை சுமார் 6 மணியளவில் கழிவறைக்குச் சென்றவர், கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்று மயக்க நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காவல் நிலைய சி.சி.டி.வி. காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட காவல் துறை தெரிவித்து உள்ளது.