மதுரை நகைக்கடை கொள்ளை - கைதான நிஷாந்திற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நிஷாந்த் என்பது தெரியவந்தது.
 நிஷாந்த்
Published on: 
Summary

மதுரை நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட நிஷாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடையில் கொள்ளை

மதுரை பழங்காநத்தம் நேரு நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ந்தேதி ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் (வயது 25) என்பவர் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதற்கு உதவியாக இருந்த அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி, இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மாடக்குளம் கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த 6 கிலோ நகைகள் மீட்கப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆம்னி பஸ்சில் பயணம்

அடுத்தக்கட்டமாக கொள்ளையன் நிஷாந்த்தை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி டிமிக்கி கொடுத்து வந்தான். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்ததால், பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓசூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் பயணித்த வாலிபர் ஒருவர் முகத்தில் முககவசம் அணிந்தபடி பயணித்தார். அவரது நடவடிக்கையில் சக பயணிகளுக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார். இதுபற்றி தெரியவந்ததும் பஸ்சின் மாற்று டிரைவர், உடனே தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும், மதுரை கொள்ளையில் தொடர்புடைய வாலிபர் போன்று இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

இதனால் உஷாரான போலீசார், சேஷம்பட்டி பகுதிக்கு சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையோர டீக்கடை அருகே பஸ்சை நிறுத்துமாறு டிரைவருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

தப்பி ஓட முயற்சி

அதன்படி அந்த ஆம்னி பஸ் சேஷம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் இரவு நேர டீக்கடை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு தயாராக காத்திருந்த போலீசார் டீக்கடை அருகே நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்சை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாலிபர், டிரைவர் இருக்கை அருகே உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பியோட முயன்றார்.

சுதாரித்து கொண்ட போலீசார், அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர். மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நிஷாந்த் என்பது தெரியவந்தது.

நிஷாந்த் கைது

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே நிஷாந்த்தை கைது செய்த போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் நிஷாந்தை மதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தீவிர விசாரணை

அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் நிஷாந்த், போலீஸ் வாகனம் மூலம் இரவு 8 மணி அளவில் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில் போலீசார் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நகைகளை பதுக்கி வைத்த இடங்கள் குறித்தும், நகையை கொள்ளையடிப்பதற்கான திட்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்தும் விசாரணை நடந்தது.

நீதிமன்ற காவல்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிஷாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நிஷாந்தை வரும் டிச.1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

X