

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் அரங்கேறிய பிரம்மாண்ட கொள்ளைச் சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த் 5 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அதியமான் கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே அவரது தந்தையும், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை அக்டோபர் 14-ஆம் தேதி மூன்று மாடிகளுடன் கூடிய பிரம்மாண்டமான 'தனிஷ்க்' தங்க நகைக்கடை திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மட்டும் தற்காலிகமாக விற்பனை நடைபெற்று வந்தது. இரண்டாவது தளம் காலியாக இருந்த நிலையில், மூன்றாவது தளத்தில் நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் அமைக்கும் பணிகள் மற்றும் இதர கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த மர்ம நபர்கள், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த கட்டுமான சாரத்தின் வழியே உள்ளே புகுந்தனர். அங்கு பாதுகாப்பு லாக்கர்களை உடைத்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
இந்த அதிர்வலையை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். நகைக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்ததில், கொள்ளையர்களின் தடயங்கள் சிக்கின.
விசாரணையின் முதற்கட்டமாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சமூக வலைத்தளங்களில் பரவலாக அறியப்பட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் இருந்து முதற்கட்டமாக சுமார் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையடித்த மீதமுள்ள நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற ரகசியத்தை அவர் உடைத்தார்.
மீனாட்சி காட்டிய வழிகாட்டுதலின்படி, தனிப்படை போலீசார் மதுரை அருகே உள்ள ஒரு ஆள்நடமாட்டமில்லாத வயல்வெளிக்குச் சென்றனர். அங்கு புதர்போல மண்டியிருந்த எருக்கலாஞ்செடிகளுக்கு நடுவே, மண்ணைத் தோண்டி கொள்ளையடிக்கப்பட்ட மீதி தங்க நகைகளும் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த இடத்தை தோண்டி அனைத்து நகைகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்த், சம்பவம் நடந்த நாள் முதல் போலீசாரின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இவரைப் பிடிக்க கடந்த 5 நாட்களாகத் தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று அவரது இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்த தனிப்படை போலீசார், நிஷாந்தை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது, கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இன்ஸ்டா மற்றும் யூடியூப் பிரபலங்கள், தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக இப்படிப்பட்ட பிரம்மாண்ட நகைக்கடைக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.