100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் நடக்கும்- மதுரை ஆதீனம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
Published on
Summary

லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று சொல்வதால் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வில்வநாத ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-

விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்

த.வெ.க. அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவும் கூடாது, லஞ்சம் கொடுக்கவும் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் விஜயை பாராட்டுகிறேன். திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார் முதல்வர். 100 ஆண்டுகள் வரை த.வெக. ஆட்சி தான் நடக்கும். இடைத்தேர்தல்களிலும் த.வெ.க. தான் வெற்றி பெறும். வரும் அக்.11 ஆம் தேதி மதுரை தமிழச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. நூலை அடியேன் தான் வெளியிடவுள்ளேன்.

அனைவரும் சமம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இறைவனுக்கு முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று செயல்படுகிறார். கோவிலுக்குள் கைப்பேசி எடுத்து செல்வதை தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவன் என்பதாலும், 6 மாதத்துக்கு முன்பே பிள்ளையார் பாளையம் வில்வநாத ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை.

எங்கள் மடத்துக்கு அருகிலேயே மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் நான் தினசரி அம்மனை தரிசிப்பதும் வழக்கம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com