ரூ.50 லட்சம் முன்பணம் வாங்கிய விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய சரவணன் என்மீது புகார் அளித்தார்.
Actor Rajkiran
Published on: 
Summary

நடிகர் ராஜ்கிரண் 15 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ராஜ்கிரண்

சென்னை ஐகோர்ட்டில் நடிகரும், இயக்குநருமான ராஜ்கிரண் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடித்த பிறகு எனது பெயர் திரைத்துறையில் ராஜ்கிரண் என்று மாறியது. திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறேன்.

முன்பணம்

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி மீஞ்சூரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சரவணன் என்பவர் என்னை அணுகி திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்து எனக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக தந்தார்.

ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கவில்லை. ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்புக்காக தந்த ரூ.50 லட்சத்தை திரும்பத்தருமாறு என்னிடம் கேட்டார். அதற்கு கால அவகாசம் கோரினேன்.

புகார்

இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய சரவணன் என்மீது புகார் அளித்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ரூ.10 லட்சத்தை சரவணனுக்கு 2025 ஆகஸ்ட் மாதம் கொடுத்தேன்.

பொன்னேரி நீதிமன்றம்

இந்த நிலையில், நான் அவரிடம் ரூ.40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக என் மீது மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்குப்பதிவு செய்யக்கோரி பொன்னேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது பொன்னேரி மாஜிஸ்திரேட் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28-ந்தேதி என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமின்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், மனுதாரர் ராஜ்கிரணுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ராஜ்கிரண் 15 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com