

சில நொடிகளில் தீ மளமளவென பரவி, பெட்ரோல் பங்கிலும் தீப்பற்றியது. இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் எரிபொருள் நிரப்பும் போது சொகுசு கார் தீப்பிடித்து கார் மற்றும் பெட்ரோல் பங்க் தீயில் கருகி சேதமடைந்தன. கார் மோதியதில் பங்க் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு ஒரு சொகுசு காரில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார். காரை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் நிரப்புவதற்காக பங்க் வளாகத்திற்குள் வேகமாக காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த குட்டு குமார் என்ற ஊழியர் மீது கார் மோதியது. இதில் அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் காரை பெட்ரோல் நிரப்பும் பம்ப் அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பிடித்தது. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும் உடனடியாக காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
அடுத்த சில நொடிகளில் தீ மளமளவென பரவி, பெட்ரோல் பங்கிலும் தீப்பற்றியது. இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், அத்திப்பள்ளி மற்றும் ஆனேக்கல் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும், இந்த தீ விபத்தில் பெட்ரோல் பங்க் மற்றும் சொகுசு கார் ஆகியவை பெருமளவில் தீயில் கருகி சேதமடைந்தன.
இதனிடையே, காரை ஓட்டி வந்த வாலிபரை அத்திப்பள்ளி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சஞ்சய் என்பதும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கார் மோதியதில் காயமடைந்த பங்க் ஊழியர் குட்டு குமார், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.