

சரக்கு கிடைக்க தாமதமானதாக கருதி ஆங்காங்கே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் உடனடியாக வராததால் நிலைமை மோசமானது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் சிறப்பு தினங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிப்பது வழக்கமானது.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களில் இருந்தே மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. கடைகள் திறந்தது முதல் இரவு அடைக்கும் வரை எப்பொழுதும் நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்தக் கூட்டம் நேற்று தீபாவளி தினத்தில் மேலும் பல மடங்கு அதிகரித்து கடை ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போதை பிரியர்கள் காலை 11 மணிக்கு வரிசையில் நிற்க தொடங்கினர். 12 மணிக்கு கடை திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு ஒரு வரை ஒருவர் முண்டி அடித்தனர்.
சினிமா தியேட்டரில் புது படத்திற்கு வரிசையில் நிற்பது போன்று மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சரக்கு வாங்கி சென்றனர்.
ஒவ்வொரு கடைகளிலும் ஒன்று இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லை. ஒரு சில டாஸ்மாக் கடைகளில் பெருங்கூட்டம் கூடியதால் பாதுகாப்பு தடுப்புச் கட்டைகளை உடைத்து சரக்கு வாங்க முயன்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக வட சென்னை பகுதியில் உள்ள கடைகளில் அத்துமீறி மது பிரியர்கள் சென்றதால் இரவு 10 மணி வரை செயல்படக்கூடிய கடைகள் 7, 8 மணிக்கே மூடப்பட்டது.
நிலைமை மோசமானதால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீஸ் உதவியுடன் கடைகள் மூடப்பட்டன. மது பிரியர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
மதுபானங்கள் சீக்கிரம் கிடைக்காததால் வரிசையில் நின்ற போதைப் பிரியர்கள் ஊழியர்களை திட்டுவதும் முன்பகுதியை அடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அயப்பாக்கத்தில் உள்ள கடையில் நேற்று இரவு விற்பனையாளர் பழனி என்பவரை பாட்டிலால்தாக்கியதில் நெற்றிப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. சரக்கு தருவதற்கு தாமதமானதால் ஆவேசமடைந்த போதை பிரியர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அந்த கடை உடனடியாக மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊழியரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுபோன்று பல இடங்களில் போதை பிரியர்கள் வன்முறையில் ஈடுபட தொடங்கியதால் கடைகளை முன்கூட்டியே அடைத்தனர்.
காலி பாட்டிலுக்கும் மது விற்பனைக்கும் இரண்டு முறை ஸ்கேன் செய்ய வேண்டி உள்ளது . இதனால் தாமதம் ஏற்படுகிறது. நெட்வொர்க் பிரச்சினையும் இருந்தது. தாமதத்திற்கான காரணத்தை மது பிரியர்கள் புரிந்து கொள்வதில்லை.
சரக்கு கிடைக்க தாமதமானதாக கருதி ஆங்காங்கே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் உடனடியாக வராததால் நிலைமை மோசமானது.
மது விற்பனைக்கான தாமதத்தாலேயே கூட்டம் அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. இந்த பிரச்சனைக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றார்.