

நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது,
1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-எப் பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் அதன் சிக்கல் தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறன.
எனவே, நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.
இதன் மூலம், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல்பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவார்.
திட்டப் பரப்பிடம் அல்லாத பிற, பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும்.
இந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும்,
நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு ஏற்ப சட்ட திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது