கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றம்

அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகம் மூலம் போலி புத்தகங்கள் கொள்முதல் எனக் குற்றச்சாட்டு.
பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்
Published on: 

கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமாள் முருகன்

இந்த விவகாரத்தை பிரபல எழுத்தாளரான பெருமாள் முருகன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளார். இதுபற்றி பல்வேறு தகவல்கள் வெளியிட்டுள்ள பெருமாள் முருகன் பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அகல் விளக்கு என்ற பதிப்பகம் வெளியிட்ட 2 ஆயிரம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட பதிப்பக புத்தகங்கள் மட்டும் அதிக அளவில் நூலகத்திற்கு வாங்கப்பட்டு உள்ளதாகவும், அங்குள்ள புத்தகங்களின் விலைகள் அதிக அளவில் இருப்பதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

போலி எழுத்தாளர்கள் பெயர்

அங்குள்ள புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர்களை பார்க்கும் போது அவர்கள் இதற்கு முன்பு எந்த புத்தகங்களையும் எழுதியது போல தெரியவில்லை. இதன் மூலம் புத்தக கொள்முதலில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் புகார் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் 2 பக்கங்கள் கொண்ட புகார் மனுவையும் அவர் அளித்து உள்ளார்.

முழுமையான விசாரணை

அந்த புகார் மனுவில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய போலி புத்தகங்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்த்தித்தார். அப்போது திமுக மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை வைத்த அவர், இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றார்.

X