

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 3) தீர்ப்பளிக்க உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், கொளத்தூர் தொகுதியின் அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணி, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை முடித்து அண்மையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.