சென்னையில் கொளத்தூர் புதிய தாலுகா உதயம்- தமிழக அரசு அறிவிப்பு

தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் மற்றும் அயனாவரம் என 4 பகுதிகள் உள்ளன. புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொளத்தூர் புதிய தாலுகா உதயம்- தமிழக அரசு அறிவிப்பு
Published on: 

சென்னை:

சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டை, அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், வேளச்சேரி, மதுரவாயல், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மாதவரம், அம்பத்தூர் என மொத்தம் 16 தாலுகாக்கள் உள்ளன. அதில் அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத்தூரை பிரித்து புதிய கொளத்தூர் தாலுகா உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு செயலாளர் ராஜராமன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய சென்னை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் தாலுகாவை சீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் மற்றும் அயனாவரம் என 4 பகுதிகள் உள்ளன. அதில் உள்ள கொளத்தூரை தலைமையிடமாக கொளத்தூர் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கொளத்தூர் மற்றும் பெரவள்ளூர் அதன் பகுதிகளான சிறுவள்ளூர், சின்னசெம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் இனி அயனாவரம் தாலுகாவில் கொன்னூர் அதன் பகுதிகளான மல்லிகைச்சேரி, மற்றும் அயனாவரம் அதன் பகுதிகளான அயனாவரம் பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகியவை இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com