

தொடர் தோல்விகளை தாங்க முடியாமல் பிரதமர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் காங்கிரசுக்கு கடும் கண்டனம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தொடர் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாமல், எங்கள் தலைவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் காங்கிரசிற்கு கடும் கண்டனங்கள்!
நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் .
நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் அடித்து விரட்டப்படும் காங்கிரஸ் கட்சி, தனது ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் எங்கள் தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அநாகரிக அரசியலின் உச்சம்.
அதிலும் காங்கிரஸ் கட்சியிலேயே வயதில் மிகவும் மூத்தவரான மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், நாட்டு பிரதமரின் குடும்பத்தார் மீது இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அக்கட்சியின் வளர்ப்பைத் தான் காட்டுகிறது.
மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடி அவர்களை, தேநீர் விற்றவர் என்றார்கள், குடும்பம் இல்லாதவர் என்றார்கள், தாயை பழித்தார்கள் இன்று அவரது தந்தையையும் இகழ்கிறார்கள்.
ஒட்டுமொத்த தேசமும் "மோடியின் குடும்பம்" என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது போல. இந்த கீழ்த்தரமான அரசியலுக்காகத் தான் மக்கள் காங்கிரஸை வெறுக்கிறார்கள் என்பது இன்னும் கூட புரியவில்லை போல.
எனவே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் குறித்து நாவடக்கம் இன்றி பேசிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்பதை மீண்டுமொரு முறை வலியுறுத்துகிறேன்.
இல்லையேல் பாஜக சார்பாக மாநிலம் முழுவதிலும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.