

பரிசு விழாத ஆத்திரத்தில் பெண் லாட்டரி வியாபாரியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாட்டரியில் பரிசு விழுந்தால், அதனை விற்ற வியாபாரிக்கு கமிஷன் கிடைப்பது வாடிக்கை. ஆனால் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைக்காததால் வியாபாரிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளம் மாநிலத்தில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த லாட்டரி சீட்டுகளை கேரள மாநிலத்தின் அருகே தமிழக எல்லையில் வசிக்கும் பலரும் வாங்கி வருகின்றனர்.
அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல் பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 42), கேரளம் மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஓணம் பம்பர் லாட்டரி வாங்கி உள்ளார். அதில் தனக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என அவர் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை.
இது சிவகுமாருக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும் லாட்டரி சீட்டு விற்ற வியாபாரி மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. எனவே வயநாடு நென்மேனி பகுதிக்கு சென்ற அவர், தான் லாட்டரி வாங்கிய வியாபாரி வினிதா (32) விடம் பரிசு விழாதது பற்றி கேட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினிதாவை சரமாரியாக குத்தினார்.
இதில் அவருடைய கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு விரைந்தனர். இதனை பார்த்ததும் சிவகுமார் தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வினிதா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசு விழாத ஆத்திரத்தில் பெண் லாட்டரி வியாபாரியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.