

தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய ஆட்சியின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார்.
மேலும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? புதிய திட்டத்தை தொடங்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்திருந்தால் வரவேற்றிருப்போம் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்க எழுந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்,
"கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் அவர் பெயரை சொன்னபோது அதற்கு எழுந்து நின்று வாஞ்சையோடு தாய்மையோடு எழுந்து நின்று வருத்தம் தெரிவித்த முதல்வர் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்.
தென்னநாடு பெர்னாட்ஷா என்றால் அது அறிஞர் அண்ணா தான். தெற்கில் இருந்து உதித்த சூரியன் என்றால் அது கலைஞர் தான்.
ஆனால் இங்கே பேசும்போது அந்த டேபிள் செய்தது நாங்கள் தான், மைக் செய்தது நாங்கள் தான் என பேசிக்கொண்டிருக்கிறார். இது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
பெயர் மாற்றம் பற்றி பலரும் பலமுறை சொல்கிறீர்கள். நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். 96 க்கு பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி அமையும்போது அவர் பெயர் மாற்றம் பற்றி பேசியிருந்தார்.
திரைப்பட நகர் ஜேஜே சினி சிட்டி ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியும், இந்த பெயரை கலைஞர் ஆட்சி அமைந்த பிறகு ஜேஜே சினி சிட்டியை அதற்கு பொருத்தமான பெயர் மாற்றமாக எம்ஜிஆர் திரைப்பட நகராக மாற்றுகிறேன் என அறிவித்திருக்கிறார்.
எனவே பெயர் மாற்றம் காலங்காலமாக நடந்து வருகிறது. அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக் ஆக மாறியிருக்கிறது.
ஆனால் நான் 10 இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார் என்ற கொள்கை தலைவர் காமராஜர் பெயர் தான் இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானது.
இந்த திட்டம் ரூ.203 கொடியே 72 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரு குறிப்பிட்ட வகுப்பு வரை இருந்த திட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமாக பெயர் இந்த உலகிலேயே இருக்காது.