முதலமைச்சரை பற்றி தரக்குறைவு பேச்சு... திமுக எம்எல்ஏவை சாடிய பெண் அமைச்சர் - சபாநாயகர் சொன்னது என்ன?

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on
Summary

நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும் போது, "முதலமைச்சர் விஜய் பற்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பற்றியும் ஒருமையில் பேசினார்.

இந்த பேச்சுக்கு வில்லங்கம் வரும் என்று மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான் பேச விட்டாலும் என்னை வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.

இது சம்பந்தமாக சட்டசபையில் இன்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது,

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தொழில்துறை அமைச்சரையும் பெண் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசியது கண்டனத்துக்குரியது; திமுகவினர் தேர்தல் தோல்வி மற்றும் ஆற்றாமையால் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-

நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார் .

அவர்கள் வெளியில் பேசி இருந்தாலும் அது நம்முடைய மாண்பை குலைப்பதாக இருந்தாலும், முதலமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும், அமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும் அதை படித்து பார்த்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி நல்ல முடிவு எடுப்பேன் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com