

கோவை பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் எழுந்துள்ள முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“கோவையில் கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பெரியார் நூலகத்தை, கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில், ஏழு தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நானும் கடந்த வாரம் இந்நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டேன்.
இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
நூலகத்தின் நான்காவது தளத்தில் அகல்விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 1,800 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தீவிர வாசகர்கள் மத்தியில் அறிமுகமில்லாத இந்தப் பதிப்பகம், நூலகத்திற்குப் புத்தகங்களை விநியோகிப்பதற்காக தொடங்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், முறையான தொழில்நுட்பப் பயன்பாடின்றி செயற்கை நுண்ணறிவின் துணையுடன் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நூலாசிரியர்களின் பெயர்கள் புனைப்பெயர்களாகவோ போலியான பெயர்களாகவோ இருப்பதாகவும், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள் இணையத்தில் சரிபார்க்கப்பட்டபோது கிடைக்கவில்லை என்றும், பதிப்பகத்தின் முகவரியும் நம்பகத்தன்மையற்றதாகத் தெரிவிப்பதாகவும் பெருமாள் முருகன் சாட்டியுள்ளார்.
இவை சாதாரணமான குற்றச்சாட்டுகள் அல்ல. பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் அறிவுக் கருவூலத்தில், போலியான பதிப்பகங்கள் மூலமாகத் தரமற்ற அல்லது புனையப்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், அது மிகப்பெரிய நிர்வாக முறைகேடாகும்.
குறிப்பாக, அந்த நூல்களில் வரலாற்றைத் திரிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிஞர்கள் சுட்டிக்காட்டுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மேலும், நூலகத்தில் இன்னும் அடுக்கி வைக்கப்படாமல் உள்ள ஏராளமான நூல்களும் பார்வைக்கு வரும்போதுதான் கொள்முதலில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் முழுப் பரிமாணமும் தெரியவரும்.
எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:
பெரியார் நூலகத்திற்காக இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நூல்களையும், பதிப்பகங்கள், ஆசிரியர்கள், ISBN எண்கள் மற்றும் விலை விவரங்களையும் சுயாதீனக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
அகல்விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட சந்தேகங்களுக்குரிய பதிப்பகங்களின் பதிவு, முகவரி, உரிமையாளர்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
போலியான ISBN எண்கள், புனைப்பெயர் அல்லது போலியான ஆசிரியர் விவரங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் நூல்கள் ஆகியவை குறித்து தொழில்நுட்பம் மற்றும் பதிப்புத்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நூல்களை உடனடியாக அகற்றுவது, அவற்றைக் கொள்முதல் செய்த அதிகாரிகள், பரிந்துரைத்தவர்கள் மற்றும் விநியோகித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தகக் கொள்முதலுக்காகச் செலவிடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்குமான கணக்கை வெளிப்படையாகப் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்.
ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் நூலகம், அறிவையும் பகுத்தறிவையும் வளர்க்கும் அறிவுக் கருவூலமாகத் திகழ வேண்டுமே தவிர, போலி நூல்களையும், வரலாற்றுத் திரிபுகளையும் கொட்டிவைக்கும் இடமாக மாறிவிடக் கூடாது.
இந்தப் புத்தகக்கொள்முதலில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதனை வெறும் நிர்வாகக் குறைபாடாகக் கருதி செல்லக்கூடாது.
முறைகேடுகளின் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
பெரியார் பெயரில் அமைந்துள்ள நூலகத்தில் போலித்தனத்திற்கும், ஊழலுக்கும் இடமளிக்கக் கூடாது.
உண்மையை வெளிக்கொணர்ந்து, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.