

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி தனது இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.
நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,
கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர் போன பகுதிகளிலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கள்ளச்சாராய துயர சம்பவத்திலிருந்து இச்சம்பவம் நிகழ்ந்த 2024 வரை பணியாற்றிய இச்சம்பவத்திற்கு பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்துவந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணையை தொடங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கல்வி கற்ற திறன்மிக்க திறன்சாரா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.