

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது ரசிகர்களிடம் இருந்து இனிப்புகளைப் பெறுவதற்காக, தனது வீட்டின் முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்த மதுரையைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் வீரமணி என்பவர், தற்போது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி ஆன்லைன் ஆர்டர்களால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
வீரமணி தனது முகவரியைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, மர்ம நபர்கள் சிலர் அவரது பெயரில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் இருந்து விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் ஆர்டர் செய்து பிராங்க் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அவரது வீட்டிற்குத் தொடர்ந்து வந்த டெலிவரி ஊழியர்கள், அவர் ஆர்டர் செய்யாத தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வந்து குவித்துள்ளனர்.
இதில் ஒரு டிவியின் விலை மட்டும் சுமார் ரூ.1.69 லட்சம் ஆகும். இதுமட்டுமின்றி, ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ ஊழியர்களும் உணவுகளோடு அவரது வாசலில் காத்து நின்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் ஜேசிபி இயந்திரம் மற்றும் இராணுவ டாங்கிகளுக்குக் கூட ஆர்டர் செய்யப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
அடுத்தடுத்து டெலிவரி வாகனங்கள் வீட்டை முற்றுகையிட்டதால் அதிர்ச்சியடைந்த வீரமணி, இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். அதில், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? டெலிவரி செய்யும் ஊழியர்கள் மிக நீண்ட தூரத்திலிருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இதை இத்துடன் நிறுத்துங்கள். அரை மணி நேரத்தில் 15 ஆர்டர்கள் வந்துவிட்டன, இவை அனைத்திற்கும் பணம் செலுத்த என்னிடம் காசு இல்லை" என்று கைகூப்பிக் கெஞ்சியுள்ளார்.
மேலும், டெலிவரியை நிறைவு செய்வதற்கான ஓடிபி எண்களைத் தான் யாருக்கும் வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர் அச்சுறுத்தல் காரணமாக வீரமணி தனது அடுத்த வீடியோவில், "லட்சக்கணக்கில் ஆர்டர் செய்ததால் பலர் என் பின்னால் வருகிறார்கள். என்னை ஏசுகிறார்கள். இதனால் நான் ஊரை விட்டே வெளியேறுகிறேன்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விபரீத பிராங்க் இத்துடன் நிற்காமல், யாரோ அவரது மொபைல் எண்ணை 'சிறுநீரக தானம்' செய்யும் விளம்பரத்தில் பகிர்ந்ததால், தொடர்ந்து அதுகுறித்த விசாரிப்பு அழைப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றன.
பண்டிகை காலத்தில் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க நினைத்து முகவரியைப் பகிர்ந்த இன்ஃப்ளூயன்சருக்கு, நெட்டிசன்களின் இந்த எல்லை மீறிய செயல் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் எழத் தொடங்கியுள்ளன. "இவை அனைத்தும் வியூஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக வீரமணி செய்யும் போலி விளம்பரம்" என்று பல நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எந்தவொரு நிறுவனமும் ஓடிபி அல்லது முன்பணம் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையிலான ஆர்டர்களை, அதுவும் இராணுவ டாங்கிகள் போன்றவற்றை டெலிவரிக்கு அனுப்பாது என்பதால், இது அனுதாபத்தைத் தேட நடத்தப்படும் நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.