

குழந்தை முதல் 90 வயதை எட்டிய முதியோர் வரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை வாடிக்கையாகவே கொண்டுவந்துவிட்டனர். காலையில் கண் விழிப்பதில் தொடங்கி, இரவில் கண் அயர்வது வரை உடலில் ஒரு அங்கமாக ஒட்டிக்கொண்டுள்ள செல்போன்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ பார்க்காமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
அதிலும் இன்புளூயன்சர்கள் எனப்படும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களை பின்தொடர்வது ஒரு நாகரீகமாக கருதப்படுகிறது. அதன் மூலம் அந்த பிரபலங்கள் லட்சங்களை வருமானமாக்கி கொள்கிறார்கள். தங்களை பின்தொடர்வோரின் விருப்பங்களை தெரிந்துகொண்டு அதற்கேற்ற வீடியோக்களை பதிவிட்டு தன்வசப்படுத்தி வருவோரின் எண்ணிக்கையும் லட்சங்களை தாண்டிவிட்டது.
இதில் பல விபரீதங்களும், வில்லங்கங்களும் அடங்கும் என்பதற்கு முன்னுதாரணமாகி விட்டார் மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி. சாதாரண ஒரு ஸ்வீட் பாக்சுக்கு ஆசைப்பட்டு இன்று வீட்டை பூட்டிவிட்டு சுடுகாட்டிற்கு சென்று விட்டார் என்பதுதான் கூடுதல் தகவல். இன்ஸ்டாகிராமில் தன்னை முழு நேரமும் செலவிட்ட மதுரை அனுப்பானடியை சேர்ந்த வீரமணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதற்காக தனது பின்தொடர்வோரின் உதவியை நாடினார். அதன்பேரில் அவருக்கு கிடைத்த ரூ.6 ஆயிரத்தை வைத்துக்கொண்டு கேரளா சென்ற அவர் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டார்.
பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் தீபாவளி ெநருங்கி வரும் நிலையில் தனது ரீல்ஸ் வீடியோவில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டு பதிவிட்டார். கூடவே தனது முகவரியையும் அந்த வீடியோவில் தெளிவாக தெரியுமாறு குறிப்பிட்டு இருந்தார். அதுதான் அவரை தற்போது சுடுகாட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
வழக்கம்போல் தனது வீட்டின் சோபாவில் படுத்துக்கொண்டு விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்ட வீரமணி, தனது பின்தொடர்வோரிடம் கேட்டது வெறும் ஸ்வீட் பாக்ஸ் தான். ஆனால் வந்ததோ விலையுயர்ந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை. அதைப்பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த வீரமணிக்கு வந்த அடுத்த தகவல்தான் அதிர்ச்சியில் உறையவைத்தது. காரணம் வந்திறங்கிய அனைத்து பொருட்களும் கேஷ் ஆன் டெலிவரி (பணத்தை கொடுத்து பொருளை பெறுதல்) என்று இருந்தது.
பொழுது விடிந்தால் போதும் ஒரு விற்பனை நிலையமே நடத்தும் அளவுக்கு அவருக்கு பொருட்கள் வந்து குவியத்தொடங்கின. அதில் 100 இன்ஞ் மெகா டி.வி., மின்சாதனம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு வந்தவண்ணம் இருந்தன. அதில் எதையுமே வாங்கும் அளவுக்கு பணமின்றி தவித்த வீரமணி, அவை அனைத்தையும் கேன்சல் செய்து திருப்பி அனுப்பினார்.
தீபாவளியையொட்டி தங்கள் வாடிக்கையாளர் இவ்வளவு பொருட்கள் வாங்குகிறார் என்று நினைத்த அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆசையும் அனுப்பி வைத்த அத்தனை பொருட்களும் மீண்டும் அவர்களிடமே திரும்பி சென்றது. ஒரு கட்டத்தில் அதற்கான ஓ.டி.பி. எண்ணை கூட கூறமுடியாத அளவுக்கு அல்லல்பட்ட வீரமணி வேறு வழியின்றி வீட்டை பூட்டிவிட்டு வெளியேறினார்.
ஒரே நேரத்தில் பல டெலிவரி ஊழியர்கள் இவரது வீட்டிற்கு வந்து பில்லைக் கொடுத்துப் பொருளை வாங்குமாறு கேட்டனர். இதில் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அவர், “என்னடா இது பெரிய சோதனையா இருக்கு” என்று நொந்துபோய் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஒரு சில நெட்டிசன்கள் இவர் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வகையில், அவரது முகவரிக்குக் கண்டபடி ஆன்லைனில் ஆர்டர்களைப் போட்டு பழிவாங்கி வருகின்றனர்.
“அடேய் விளங்காதவங்களா... உங்க கை, கால்களில் விழுந்து கும்பிடுறேன்டா. தயவு செய்து ஆர்டர் போடுவதை நிறுத்துங்கடா. என்னால் போனைக்கூட பார்க்க முடியலடா. போனை ஆப் பண்ணி வைத்தாலும் பிரச்சினை, ஆன் பண்ணினாலும் பிரச்சினை... என்னால் தாங்க முடியலடா, எவ்வளவுடா ஆர்டர் போடு வீங்க? இதையெல்லாம் எப்போடா போட்டீங்க, எங்கிருந்துடா போடுறீங்க?
ஒரு ஸ்வீட் பாக்சுக்கு ஆசைப்பட்டு முகவரியைக் கொடுத்து விட்டு படாதபாடு படுகிறேன்டா. இனிமேல் நான் உங்ககிட்ட எதுவுமே கேட்க விரும்பலடா. தயவு செய்து ஆர்டர் போடுவதை மட்டும் நிறுத்துங்கடா, அது போதும். உங்களுக்குக் கோடான கோடி நன்றி, புண்ணியமா போகும். நீங்களாம் நல்லா இருப்பீங்கடா? மெண்டல், கிறுக்குப் பயலுகளா... எனக்கு ரத்தக்கொதிப்பு ஏறுதுடா, பிரஷர் மாத்திரை வேற சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்டா”
வீரமணி இப்படி புலம்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஒரே நேரத்தில் ஏராளமான பொருட்கள் கேஷ் ஆன் டெலிவரி முறையில் வந்துகொண்டே இருந்தன. அதிலும் ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சியையும், இன்னொருவர் ஒருபடி மேலேபோய் ேஜ.சி.பி. எந்திரத்தையும் ஆர்டர் செய்திருந்தனர். மற்றொருவர் ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி வரை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், வீட்டிற்கு வந்த அமேசான் டெலிவரி ஊழியரிடமே அவர் கதறியுள்ளார். “ஒருவரைப் பழிவாங்க இப்படி கூடவா செய்வார்கள்?” என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “ஆரம்பத்தில் இதைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனால், இவரது எல்லா வீடியோக்களிலும் இதுதான் நடக்கிறது. இதனால் பல டெலிவரி ஊழியர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். இவர் வேண்டுமென்றே தனது முகவரியை வீடியோவில் காட்டி, எங்கோ இருக்கும் நபர்கள் கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் போட்டு ஜாலி செய்வதாகக் காட்டி வீடியோ போடுகிறார்” என்று விமர்சித்துள்ளார். எது எப்படியோ, ஒரே நேரத்தில் வந்து கொண்டே இருக்கும் ஆன்லைன் ஆர்டர்களால் வீரமணி தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை. என்றைக்குமே ரீல்ஸ், ரீல்ஸ்தான், ரியல், ரியல் தான்.