நீர்வரத்து 848 கன அடியாக குறைவு: ஒரு வாரத்தில் மேட்டூர் அணை மூடல் - சம்பா நெற்பயிரைக் காக்க அரசின் திட்டம் என்ன? - அன்புமணி கேள்வி!

கடந்த 4 மாதங்களில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு 123.14 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 44.20 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது.
நீர்வரத்து 848 கன அடியாக குறைவு: ஒரு வாரத்தில் மேட்டூர் அணை மூடல் - சம்பா நெற்பயிரைக் காக்க அரசின் திட்டம் என்ன? - அன்புமணி கேள்வி!
Published on: 

கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை சரியாக திறக்காதநிலையில், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பா சாகுபடியையாவது பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

நீர்வரத்து குறைவு

கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், அந்த நீரும் கர்நாடகப் பாசனத்திற்காக உறிஞ்சப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 848 கன அடியாக குறைந்து விட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மேட்டூர் அணையிலிருந்து நீர்த்திறப்பு வரும் 15ஆம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ள நிலையில், சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற வினா எழுந்துள்ளது.

ஜூன் 12 திறக்கப்படாத மேட்டூர் அணை

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததாலும், தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும் மேட்டூர் அணையை திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி திறக்க முடியாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அதைக் கொண்டு சம்பா மற்றும் தாளடி பயிர்களையாவது வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம் என உழவர்கள் நம்பியிருந்தனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 12.68 லட்சம் ஏக்கரில் சம்பா/தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 1.68 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடவு செய்யப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் சரிவு

சம்பா நடவு இந்த அளவுக்கு குறைவாக செய்யப்பட்டிருப்பதற்கு உழவர்களிடம் நிலவும் நம்பிக்கையற்ற சூழலும், குழப்பமும் தான் காரணம் ஆகும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது அணையில் 92.50 அடி, அதாவது 55.50 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருந்தது.

தொடர்ந்து தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில், சம்பா சாகுபடிக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்குமா? என உழவர்கள் மத்தியில் நிலவிய ஐயம் தான் இதற்கு காரணம் ஆகும்.

தண்ணீர் திறக்கப்பட்டு இன்றுடன் 37 நாள்களாகும் நிலையில், இப்போதும் கூட திருவாரூர், நாகை மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருவதால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பான்மையான உழவர்கள் சம்பா/தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்வதற்கு விருப்பம் காட்டவில்லை.

சம்பா பயிரையாவது காப்பாற்ற முடியுமா?

இது ஒருபுறமிருக்க, 1.68 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிரையாவது காப்பாற்ற முடியுமா? என்ற அச்சமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 67.72 அடி, அதாவது 30.77 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 848 கன அடியாக குறைந்து விட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 4 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதாக கணக்குக் காட்டப்பட்டாலும், அந்த நீர் வரும் வழியில் கர்நாடக உழவர்களால் உறிஞ்சப்படுவது தான் இதற்குக் காரணம் ஆகும்.

அணையிலிருந்து வினாடிக்கு 15,003 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் படுவதால், இன்னும் 16 நாள்களுக்கு, அதாவது அக்டோபர் 23ஆம் தேதி வரை மட்டுமே நீர் திறக்க முடியும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும்வரை...

ஆனால், சம்பா பாசனத்திற்காக 45 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால், வரும் 15ஆம் தேதியுடன் நீர்த்திறப்பு நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பா பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், வடகிழக்கு பருவமழை தொடங்கும்வரை காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

வழக்கமாக அக்டோபர் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும் என்றாலும், எல்நினோ காரணமாக நடப்பாண்டில் எப்போது பருவமழை தொடங்கும் என்பது தெரியவில்லை.

பருவமழைக்கு பிறகு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திறப்பதற்கு மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருக்குமா? என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவும் யாராலும் இயலவில்லை.

தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

காவிரி பாசன மாவட்டங்களில் இத்தகைய அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் கர்நாடக அரசு செய்த துரோகம் தான். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு 123.14 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 44.20 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது.

கடந்த 52 ஆண்டுகளில், இது நான்காவது குறைந்த அளவாகும். கர்நாடக காவிரி அணைகளில் இன்றைய நிலையில், 56.50 டி.எம்.சி நீர் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதில் 33 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு உறுதியாகத் தெரிவித்து விட்டது.

இத்தகைய சூழலில் சம்பா/தாளடி பயிர்களைக் காக்க என்ன செய்யப்போகிறது? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேட்டூர் அணையில் இருக்கும் நீரை வினாடிக்கு 12,000 கன அடி வீதம் இந்த மாதம் முழுமைக்கும் திறப்பதற்கும், உச்ச நீதிமன்றம் வாயிலாக கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்து குறைந்தது 15 டி.எம்.சியாவது தண்ணீர் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com