17 கைதிகள் தப்பிய விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - திமுக பரந்தாமன்

நிர்மல்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்.
17 கைதிகள் தப்பிய விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - திமுக பரந்தாமன்
Published on: 

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியநிலையில், தமிழ்நாட்டுச் சிறைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

தலைமுறை மறந்த நிகழ்வு

சிறையில் இருந்து மொத்தமாக கைதிகள் தப்பித்து ஓடும் சம்பவம் 31 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஒரு தலைமுறையே மறந்து போன நிகழ்வு, தவெக ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது.

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடியிருக்கிறார்கள். சிறைத்துறையின் கடுமையான பாதுகாப்புக் குறைபாட்டையும், நிர்வாக அலட்சியத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது இந்த சம்பவம்.

'வலிப்பு நோய்' நாடகம் ஆடி சிறைக் காவலர்களை இரும்புத் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, சிறைச் சாவிகளைப் பறித்துக் கொண்டு முதன்மை நுழைவு வாயில் வழியாகவே கைதிகள் தப்பி சென்றிருக்கிறார்கள்.

முதன்மை வாசல் வழியாகவே 17 கைதிகளும் ஒரே நேரத்தில் தப்பி சென்றிருப்பது சிறைத் துறை வரலாற்றிலேயே நடக்காத ஒன்று!

விரிவான விசாரணை வேண்டும்

கைதிகளின் நாடகத்தை முன்கூட்டியே கணிக்கத் தவறியது, அவசரக் காலப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாதது என்பதெல்லாம் அப்பட்டமான மனிதத் தவறுகள்தான்.

பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்த 9 சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் மட்ட அளவில் பொறுப்பு வகிக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை ஊழியர்களில் எவரேனும் கைதிகளுக்கு உடந்தையாக இருந்தார்களா? லஞ்சம் மற்றும் கூட்டுச் சதி ஏதேனும் பின்னணியில் உள்ளதா? என்பதை எல்லாம் விரிவான விசாரணைக்கு உட்படுத்தினால்தான், உண்மைகள் வெளிவரும்.

வெறும் கீழ்மட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் மட்டும்தான் நடவடிக்கையா? குற்றவியல் நடவடிக்கைக்கு அரசு சார்பற்ற விரிவான விசாரணை அவசியம்.

விசாரணை ஆணையம் தேவை

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 13 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மாற்றுத்திறனாளி கைதியை ஒரு ஆட்டோ டிரைவரே பிடித்து கொடுத்திருக்கிறார். யார் கண்டுபிடித்து கொடுத்தார்கள் என்பதில் முரண்பாடுகள் நிலவுகிறது. இதையெல்லாம் கண்டறிய விசாரணை கமிஷன் அவசியம்.

புழல் சிறையில் இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளேயே தேனி சம்பவம் நடந்திருக்கிறது. அடுத்தடுத்து இப்படி சம்பவம் நடப்பதற்கு பின்னணி என்ன? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் மொத்த உண்மைகளும் வெளிவரும்.

இந்த விசாரணை கமிஷன் தேனி சம்பவத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு சிறைகளின் பாதுகாப்பை பலப்படுத்த அவசியமாகும்.

சிறைச்சாலைகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் இரும்பு அரண்கள். அங்கே எந்தவொரு சிறு அலட்சியமும், கவனச்சிதறலும் ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

தற்காலத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேசச் சிறை பாதுகாப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறைத்துறையில் முக்கியச் சீர்திருத்தங்கள் உருவாக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சிறைக் கைதிகள் தப்பித்து ஓடும் நிகழ்வுகள் நடக்காமல் இருக்க விசாரணை ஆணையத்தின் மூலம் புதிய கட்டுப்பாட்டு விதிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

தேனி சிறையில் காவலர்கள் பற்றாக்குறை இருக்கிறது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனை அரசு அலட்சியம் செய்திருப்பதுதான் தேனி சம்பவம் நடப்பதற்கு காரணம். இதனையெல்லாம் கண்டறிய, பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு விசாரித்தால்தான் உண்மை தெரியும்.

மின்சாரம், சட்டம், சிறை, ஊழல் தடுப்பு என நிறைய துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நிர்மல்குமார் தன்னுடைய எல்லா துறையிலும் சோடை போயிருக்கிறார்.

மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், அரசு வழக்கறிஞர்கள் நியமணத்திற்கு லஞ்சம், ஆட்சிக்கு வந்து 50 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பித்தல் என நிர்மல்குமாரின் துறைகள் மோசமாக செயல்பட்டிருக்கின்றன. இந்த நிர்மல்குமாரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com