

தமிழகத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும்போது, அங்கு நிச்சயமாக தான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது சீமான் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
கடந்த திமுக ஆட்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட்டோம், மற்ற கட்சிகள் விலகிவிட்டன.
அதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியிலும், நாம் தமிழர், பாமக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடியாததால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் விலகிவிட்டன. அப்போழுது நாங்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சி அனைத்து சாதியினருக்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் பொது வேட்பாளராக உள்ளது.
அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் எனக்கு உறவினர்கள் தான், அதற்காக அவர்களை எதிர்த்து களம் காணாமல் இருக்க முடியாது. எங்களுக்கு உறவு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு.
இதுதான் நான் ஏற்றுக்கொண்ட கொள்கை, அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
நான் 16 ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறேன், எந்த தொகுதியிலும் நான் போட்டியிடாமல் வெளியேறியது கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.