

தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை, மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் கீதா. அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் இவர் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இன்று காலை வீட்டில் கீதாவின் மகள் மட்டும் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்டு கீதாவின் மகள் பதறியடித்து வெளியே வந்தார்.
சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் பற்றி எரிந்தது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் தேவாலாயம் உள்ளது. இங்கு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பிராரத்தனையில் பங்கேற்க ஏராளமானோர் வந்து இருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் தேவாலயத்தில் இருந்தவர்களும் பதட்டத்துடன் வெளியே வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.