மதுபாட்டில்களை திரும்பப் பெறும் எந்திரம்: டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டெண்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வோர், டெண்டரில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தார்.
TN Secretariat- Chennai highcourt
Published on: 

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெற, ரிவர்ஸ் வெண்டிங் எந்திரங்களை நிறுவுவதற்கான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக, ரிவர்ஸ் வெண்டிங் மிஷின்களை அமைத்து இயக்க, கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநிலம் முழுவதற்கும் சேர்த்து ஒரே நிறுவனத்தை இந்த பணிக்கு நியமிக்க இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் டெண்டர் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை ரத்து செய்து, மாவட்ட அளவில் காலி பாட்டில்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பங்கேற்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 22-ந்தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலை தொழில்நுட்ப டெண்டர் திறக்கப்படும்.

டெண்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வோர், டெண்டரில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெண்டரை திறக்கலாம்.

இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com