

மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. விலையை குறைத்து, 276.20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வழங்கப்படும்.
த.வெ.க. அரசின் பட்ஜெட்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதை செயல்படுத்தும் வகையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்ட நிறுவனங்களுடன்- 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
இதில் மாணவர்களுக்கான சைக்கிளை 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை 5130 ரூபாய்க்கும் வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் விலையில்லா நவீன சைக்கிள் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
இதற்காக வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியின் அடிப்படையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மாணவர்களின் சைக்கிளுக்கு 7,235 ரூபாயும், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு 7476 ரூபாயும் கோரியிருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளுக்கு முதலில் கோரிய 7235 ரூபாயிலிருந்து 1975 ரூபாயை குறைத்து 5260 ரூபாய்க்கும்,மாணவிகளுக்கான சைக்கிளில் கோரிய 7476 ரூபாயில் இருந்து 2346 ரூபாயை குறைத்து 5130 ரூபாய்க்கும் வழங்க முன்வந்தது ஹிரோ சைக்கிள்ஸ் நிறுவனம்.
தமிழக அரசு சார்பில் ஒப்பந்தபுள்ளி கோரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட கொள்முதல் குழு 9 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான சைக்கிளை 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை 5130 ரூபாய்க்கும் வழங்க முன்வந்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணையை வழங்க அரசு அமைத்த குழு பரிந்துரை செய்தது.
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன சைக்கிள் வழங்குவதற்காக 276.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு பிறகு 276.20 கோடி ரூபாய்க்கு சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.