

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை கணிசமாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்காவிற்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுளளது.
உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண் சரிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக உதகை-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பர்லியார் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண் சரிவில் அரசு பேருந்து சிக்கியது. ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என பேருந்தில் பயணித்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திடீர் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரம்.
உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று (அக்.24) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் -உதகை இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.