

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் அருகே சாலையோரம் நின்ற ஒரு ராட்சத மரம் இன்று காலை வேரோடு சாய்ந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய தொழில் பாதித்து வந்தது. இந்த நிலையில் அங்கு கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விடிய விடிய மழை
அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடியவிடிய இடியுடன் கூடிய கனமழை பரவலாக பெய்தது. இதனால் அங்கு தற்போது மேகமூட்டத்துடன் கூடிய கடுங்குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே குன்னூரில் விடியவிடிய பெய்த மழை காரணமாக அங்குள்ள மலைப்பாதைகளில் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் அருகே சாலையோரம் நின்ற ஒரு ராட்சத மரம் இன்று காலை வேரோடு சாய்ந்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை மின்வாளால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல குன்னூர் காட்டேரியில் இருந்து போயர் காலனி பகுதிக்கு செல்லும் வழியில் ஒரு ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் கிடந்த மரத்தின் மீது ஏறி இறங்கி சென்று வரும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அந்த வழித்தடத்தில் கிராம மக்கள் இரவுநேரங்களில் சென்று வர இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டேரி-போயர் காலனி சாலையில் விழுந்த மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.