

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை மாவட்ட வாரியாக கண்காணிப்பு, கொசு ஒழிப்பு, மருந்து தெளிப்பு, தனி வார்டுகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 17,649 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், முகக்கவசம் அணிந்து, தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சளி, இருமல், தொண்டை வலியுடன் தொடங்கும் இந்த பாதிப்பு காய்ச்சலாக மாறி கடுமையான உடல் வலி, சோர்வை ஏற்படுத்துகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சல் அதிகரித்து வருவதோடு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருந்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கண்காணித்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொசு ஒழிப்பு, மருந்து தெளிப்பு உள்ளிட்ட களப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 17,649 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தை ஒப்பிடும்போது டெங்குவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவாகும். இதுவரை 9பேர் உயிரிழந்து உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறை மூலம் இணைந்து களப்பணியாளர்களால் வீடு வீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர். நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க முடியும்.
முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் முகக்கவசம் அணிவது நல்லது. காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.