

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவும் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், விஜய்யின் இந்த பிரசாரப் பொதுக்கூட்டம் கூடுதல் எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் வருகிற 30-ந்தேதி தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாகக் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்- உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் த.வெ.க. அரசின் 140 நாள் செயல்பாடுகள், புதிய அறிவிப்புகள் மற்றும் தற்போதைய அரசியல், சமூக நிலவரங்கள் குறித்து விஜய் விளக்கிப் பேச உள்ளார்.
பொதுக்கூட்டத்திற்காக மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் அதிகளவில் திரளும் வகையில் பிரமாண்ட மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
விஜய் பங்கேற்கும் இடம் குறித்த தகவல் வெளியானதை அடுத்து, தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவும் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், விஜய்யின் இந்த பிரசாரப் பொதுக்கூட்டம் கூடுதல் எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.