

மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.
தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.
வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.
தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து குடும்பங்கள் முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார்.