

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலகம் என்னும் நவீன நூலகம் தற்போது நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய்யால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ முந்நூறு கோடி ரூபாய் செலவில் ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இந்நூலகம் உருப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் நூலகத்தில் நான்காம் தளத்தில் உள்ள தமிழ் நூல்களில் அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஒருசில தவிர எல்லாம் கெட்டி அட்டை போடப்பட்டவை. நாற்பது ஆண்டு காலமாக இலக்கிய உலகில் புழங்கிவரும் எனக்கு 1800 நூல்களை வெளியிட்டுள்ள ’அகல்விளக்கு பதிப்பகம்’ அறிமுகமாகாத ஒன்று என்று எழுத்தாளஎ பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இத்தகைய போலிநூல்கள் நீண்ட கால அடிப்படையில் தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
என்று தெரிவித்துள்ளார்.