

தீ விபத்தில் பண்ணையில் இருந்த 4 ஆயிரத்து 200 கோழிக்குஞ்சுகள் எரிந்து கருகி உயிரிழந்தன. இதுகுறித்து சண்முகம் கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த கோழிப்பண்ணையில் அவர் 4 ஆயிரத்து 200 கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். தினமும் சண்முகம் கோழிப்பண்ணைக்கு வந்து விட்டு செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல கோழிப்பண்ணைக்கு வந்தார். இரவு வரை கோழிப்பண்ணையிலேயே தங்கி இருந்தார். பின்னர் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோழிப்பண்ணை உரிமையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் வானூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 4 ஆயிரத்து 200 கோழிக்குஞ்சுகள் எரிந்து கருகி உயிரிழந்தன. இதுகுறித்து சண்முகம் கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் என்ன? மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் சதி வேலைகளில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.