புதிய படங்களுக்கு இனி ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி - முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தநிலையில், தவெக ஆட்சி அமைந்த பின் 5ஆக மாற்றப்பட்டது.
புதிய படங்களுக்கு இனி ஒரு வாரத்திற்கு 6 காட்சிகளுக்கு அனுமதி - முதலமைச்சர் விஜய் உத்தரவு!
Published on: 

தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

காலை 6 மணிமுதல் மறுநாள் 2.30 மணிவரை காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் முன்வைத்தனர்.

அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X