பண்டிகை கால கட்டண கொள்ளை: விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதித்து தமிழக அரசு அதிரடி!

விதிமீறிய பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 16.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Omni buses
Published on
Summary

கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் எழுந்தன. இப்புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு, கட்டணக் கொள்ளை மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு சுமார் 17 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாநிலம் தழுவிய வாகன சோதனை

போக்குவரத்து ஆணையர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் மற்றும் மாநிலத்தின் முக்கியச் சுங்கச்சாவடிகளில் தீவிர தணிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2,379 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் நேரில் ஏறி ஆய்வு செய்துள்ளனர்.

பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 400 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கைகளுடன் 'இ-சலான்' வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் சோதனைகளின் மூலம் விதிமீறிய பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 16.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்லுபடியாகும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிறைபிடித்துள்ளனர். தீவிர விதிமீறல்களில் ஈடுபட்ட 7 ஆம்னி பேருந்துகள் மேற்கொண்டு இயங்குவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயணச்சீட்டு ரத்து

பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் முன்விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் திடீரென ரத்து செய்துவிட்டு, அதிக விலைக்கு விற்கும் சட்டவிரோதப் போக்கைத் தடுக்க அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிர்வாகமே அப்பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் வகையில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய முயலும் நிறுவனங்களின் பேருந்து அனுமதிச் சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

புகார்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண்

அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்துப் பொதுமக்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண் (1800 425 6151) மூலமாகவும், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாகவும் உடனுக்குடன் புகார் அளிக்கலாம் எனத் தமிழகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com