

சென்னை பெரம்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், மகளின் கள்ளக்காதலனை தந்தை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தீபாவளி நாளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சென்னை பெரம்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் வீடுபுகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பான இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ். 34 வயதான இவரது மனைவி பெயர் ஷர்மிளா. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் ரமேசுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி உள்ளனர். அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில் ரமேஷ் அவருடன் நெருங்கி பழகி உள்ளார்.
இதை தொடர்ந்து ரமேசுக்கும், கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது அக்கம் பக்கத்திலும் தெரிய வந்துள்ளது. பெண்ணின் தந்தையான பாபுவுக்கும் மகளின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை கண்டித்துள்ளார். மேலும் ரமேசை நேரில் சந்தித்து தனது மகளுடன் பழகுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கண்டித்துள்ளார். ஆனால் ரமேஷ் தனது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து உள்ளார். இது பாபுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷின் வீட்டிற்கு சென்ற பாபு, நான் சொல்ல சொல்ல கேட்காமல் எனது மகளுடன் ஏன் பழகி வருகிறாய். இது எனக்கு மிகவும் அசிங்கமாக உள்ளது.
எங்கள் குடும்பத்தினரும் இது பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள் என்று கூறி இதற்கு மேலாவது எனது மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள் என கண்டித்துள்ளார். ஆனால் ரமேஷ் அப்படியெல்லாம் உங்கள் மகளுடன் பழகுவதை நிறுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் பாபு, ரமேஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடிதுடித்து பலியானார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பியம் போலீசார் ரமேஷின் வீட்டிற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ரமேஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடி தலைமறைவான பாபுவை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ரமேஷ் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் கைதான அவர் கடந்த ஜனவரி மாதம் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
ரமேஷின் மனைவி ஷர்மிளா கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையிலும் அவருடனான தொடர்பை முழுமையாக துண்டிக்காமலேயே இருந்து வந்துள்ளார்.
போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த பிறகு கணவரை அவர் சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா அதனை கண்டித்துள்ளார். இருப்பினும் ரமேஷ் தனது கள்ளக்காதலை விடாமல் தொடர்ந்த நிலையில்தான் கொலை செய்யப்பட்டு உள்ளார்.