

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை காலதாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து போனது.
அடுத்ததாக விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்ட நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாததாலும், கர்நாடக அரசு நமக்கு உரிய நீரையும் தராததாலும் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பரசபுரம், பாளையக்கோட்டை பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
சுமார் 50 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து. அதேவேளையில், விளைநிலங்களும் வெடித்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துனர். குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில், சம்பாவும் கருகி வருவதால் பயிர்களை காப்பாற்ற முடியாத விரக்திக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் கருகுவதால் வயல்களில் கால்நடைகளை மேயவிட்டு தங்களது துயரத்தை விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்ய வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாளையக்கோட்டை மற்றும் பரசபுரம் பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை பாரபட்சமின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.