வயலில் நெல் நாற்றுகளால் ஓவியம் வரைந்து இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த விவசாயி

முன்னதாக பொங்கல் சிறப்புகள், உழவின் பெருமைகள், எண் கணிதக் குறியீடுகள் ஆகியவற்றை வரைந்துள்ளார்.
வயலில் நெல் நாற்றுகளால் ஓவியம் வரைந்து இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த விவசாயி
Published on: 
Summary

வயலில் நெல் நாற்றுகளைக் கொண்டே இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய நெல் விவசாயி நெல் செல்வம்.

நெல்

இவர் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார். இந்த ஆண்டு தனது வயலில் நெல் நாற்றுகளைக் கொண்டே இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

பூமிப் பந்து, இஸ்ரோ ராக்கெட், நிலவு, சூரியன், நட்சத்திரம் ஆகியவற்றை ஒரு கோர்வையாக வரைந்துள்ள இந்த ஓவியம் கழுகுப் பார்வைக் காட்சியில் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இயற்கை ஓவியம்

முதலில் தானே ஒரு வடிவத்தை உருவாக்கி, நடவு பணியாளர்களை கொண்டு நாற்றுகளை நட்டதாகவும், தற்போது பயிர்கள் வளர்ந்து இயற்கை ஓவியமாகக் காட்சியளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இஸ்ரோ ராக்கெட் சூரியனையும் தாண்டிச் சென்று, நாட்டின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தி, மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து.

நஞ்சில்லா இயற்கை விவசாயம் மூலமே நல்ல உணவு கிடைக்கும் என்றும், உணவே மருந்து என்பதே தனது கொள்கை என்றும் கூறும் நெல் செல்வம், ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவத்தில் இவ்வாறு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக பொங்கல் சிறப்புகள், உழவின் பெருமைகள், எண் கணிதக் குறியீடுகள் ஆகியவற்றை வரைந்துள்ளார்.

பாராட்டு

இந்த ஓவியத்தைக் கண்ட வேளாண்மைத் துறை மாணவர்கள், இது தங்களுக்கு பெரிய உந்துசக்தியாக இருப்பதாகவும், இயற்கை விவசாயத்தில் பெரிய இலக்குகளுடன் செயல்பட ஊக்கமளிப்பதாகவும் பெருமையுடன் தெரிவித்தனர். தேசப்பற்றையும் இயற்கை விவசாயத்தின் சிறப்பையும் ஒருசேர வெளிப்படுத்தும் நெல் செல்வத்திற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X