

மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத் மாநிலத்தின் பவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 பேர் பவ்நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பவ்நகர் மாவட்டம் கோகா தாலுகாவிற்கு உட்பட்ட கர்கடி கிராமத்தில், கடந்த (ஆகஸ்ட்) 16-ஆம் தேதி நடைபெற்ற ஒரு தனியார் விருந்தில் சிலர் மது அருந்தியுள்ளனர். இந்த மதுபானம், இந்தியாவின் பிரபல நிறுவனமான ‘ராயல் ஸ்டேக்’ பிராண்டின் பெயரில் போலி முத்திரையிடப்பட்டு, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்ததில் கார்த்திக் மக்வானா (40), உபேந்திர கோஹில் (25), கன்சியாம்சின் ஜடேஜா (50) மற்றும் நரேந்திர யாதவ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் 18 நபர்களில், 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுகின்றனர்.
2 பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் சீரான உடல்நிலையுடன் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அகமதாபாத் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு பவ்நகர் சர் தகத்சிங்ஜி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜி.எஸ். மாலிக் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. பவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் பாண்டே தலைமையில் 16 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, கடத்தலில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நடத்திய சோதனையில், மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் பாதை அகமதாபாத் வழியே சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சுமார் 500 கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களுடன்இணைந்து காவல்துறையினர் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் மாதிரி தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 'ராயல் ஸ்டேக்' பெயரில் சந்தேகத்திற்குரிய வகையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.