மதுராந்தகம் இடைத்தேர்தல்: தூய்மையானவரை வைத்துக் கொண்டு வீர வசனம்.., முதலமைச்சர் விஜயை விமர்சித்த EPS

இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இந்தியாவே பார்க்கிறது. எந்தக் கட்சியிலும் கட்சி மாறியதும் சீட் கொடுத்தது இல்லை.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on: 

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து எல். எண்டத்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியும். பெட்டி மாறிப்போச்சு. அதனால் வந்த தேர்தல். நீங்கள் கால்கடுக்க நின்று அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று வாக்களித்தீர்கள். வெற்றி பெற்றவர் உங்களுக்கு உழைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக குதிரை பேரத்தின் வழியாக பெட்டி வாங்கினார். அவர்தான் நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

நம் தொண்டர்கள், கூட்டணியினர் பாடுபட்டு, மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற வைத்தால், குதிரை பேரத்தில் ராஜினாமா செய்து அங்கு போய் அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சென்றுவிட்டனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த தண்டனை கொடுங்கள். எவ்வளவு பெரிய துரோகம் இது. மக்களுக்காக உழைப்பதற்கு அதிமுக ஒரு வாய்ப்பு கொடுத்தும், அதை மதிக்காமல் சென்றுவிட்டார். ஓட்டுப்போட்ட மக்களையும் மதிக்கவில்லை, வெற்றி பெற வைத்த நிர்வாகிகளையும் மதிக்கவில்லை.

ஜனநாயகப் படுகொலை

நேற்று தவெக தலைவர் விஜய் அவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். வீர வசனம் பேசினார். யாரை வைத்துக்கொண்டு..? அந்த தூய்மையானவரை வைத்துக்கொண்டு… ஜனநாயகப் படுகொலை இது. இதைவிட வெட்கக் கேடானது எது இருக்க முடியும். நாம் பெற்ற குழந்தை, நாம் வெற்றி பெற வைத்தோம், மாற்றுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்றால் நம் கட்சியினர் மனம் எப்படி வெதும்பும் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இந்தியாவே பார்க்கிறது. எந்தக் கட்சியிலும் கட்சி மாறியதும் சீட் கொடுத்தது இல்லை. தவெக கொடுத்திருக்கிறது. அவருக்கு தக்க பாடம் கொடுக்க வேண்டும்.

நேற்று விஜய் வீர வசனம் பேசினார். கலைமாமணி பிரகாஷ் முப்பெரும் விழாவில் இரண்டு தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய (ஜெம் வீரமணி) நிகழ்ச்சியில் வணிகவரித்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டனர். உணவுத்துறை அமைச்சர் பேசும்போது, எம். வீரமணி எனது குடும்ப நண்பர் என்கிறார். அப்படியெனில் உண்மை வெளிவந்துவிட்டது. குற்றவாளியை பாதுகாக்கும் ஆட்சி இது. வேறொரு கட்சி மீது பழியை சுமத்தி இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பு இருப்பதுபோல அனுதாபம் தேடி பச்சை பொய் சொல்வது வரலாற்றில் இதுதான் முதல்முறை.

இந்த மதுராந்தகம் விவசாயிகள் நிறைந்த பகுதி, கைத்தறி தொழிலும் உள்ளது. தேர்தல் நேரத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்று அறிவித்தார். செய்தாரா? விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். தேர்தல் நேரத்தில் ஒன்று பேசுவது, வென்ற பின்னர் வேறொன்று பேசுவது.

இந்த ஆட்சி ரீல் மற்றும் ரீல்ஸ்தான்

இந்த ஆட்சி ரீல் மற்றும் ரீல்ஸ் தான். சினிமாவில் சட்டமன்றக் காட்சி போலதான் நிஜத்தில் நடந்தது. சட்டமன்றம் பட்டிமன்றம் ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நடந்தால் 7 மணி நேரம் வெட்டிப்பேச்சு. திமுக-வும் தவெக-வும் ஒருவரையொருவர் திட்டுவார்கள், நாங்கள் வேடிக்கைப் பார்க்க வேண்டும். இதுபோல மோசமான அரசு இந்தியாவில் எங்குமில்லை.

தவெக நிறைய அறிவிப்பு கொடுத்தது, எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 31 ஆண்டுகாலத்தில் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்சியில் ஒரு திட்டமாவது சொல்ல முடியுமா? பெரிய திட்டம் எதுவுமில்லை.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?

வாக்குறுதி கொடுத்தார், உரிமைத் தொகை 2500 ரூபாய் என்று சொல்லி கொடுக்கவில்லை, முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை. வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம், விசைத்தறி கைத்தறி ஆண்டுக்கு 30 ஆயிரம் எல்லாம் கொடுப்பதாகச் சொன்னார். எதுவும் இல்லை. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?

2 லட்சத்து 48 ஆயிரம் கோடி மின்சாரத்துறையில் கடன், 72 ஆயிரம் கோடி போக்குவரத்து துறையில் கடன், 10 லட்சம் கோடி தமிழகத்துக்கு கடன். துட்டு இருந்தால்தான் செய்ய முடியும். திமுக அரசு கஜானாவை காலிசெய்துவிட்டு சென்றது. இந்த அரசும் கஜானாவை காலி செய்ய இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்குகிறார்கள்.

4 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன்

4 மாதத்தில் 40 ஆயிரம் கோடி வாங்கிவிட்டனர். கடனெல்லாம் உங்கள் தலையில்தான் விடியும். வரி போட்டுத்தான் கட்டணும். கடந்த ஆட்சியில் வரி போட்டார்களே அதே போல்தான். தவெக ஆட்சி அமைந்ததும் வரியெல்லாம் திரும்பப்பெறுவோம் என்று சொன்னார், செய்தாரா? எல்லாம் பொய். பொய் பேசுவதற்கு விஜய்க்கு நோபல் பரிசு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். மக்கள் மத்தியிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மதுரை சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது, அமைச்சர் இருந்த விழாவிலே கரண்ட் கட். ஆனால் அமைச்சரோ மின்வெட்டு அல்ல, மின்பற்றாக்குறை என்று ஏமாற்றுகிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com