தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் இருந்ததால் கூட்டம் கூடியது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
Published on: 
Summary

காலி பாட்டில்களை இப்போது திரும்ப பெற முடியாது என்ற அடிப்படையில் கடைகளை திறக்காமல் இருக்கின்றோம். அரசு அவகாசம் கொடுத்தால் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் இன்று எந்த கடைகளும் 1 மணி வரை திறக்கப்படவில்லை.

இன்று முதல் காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட வேண்டுமென்று அரசு உத்தரவிட்டு இருந்தது.

டாஸ்மாக் கடை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாளர்கள் அலுவலகம் மற்றும் முதுநிலை மேலாளர்கள் அலுவலகம் முன்பு கூறினார்கள்.

காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான எந்த வசதியும் செய்து தராமல் அதற்கான அவகாசம் கொடுக்கப்படாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றதால் கடைகளை திறக்காமல் ஆங்காங்கே வெளியே நின்றனர்.

மதுபிரியர்கள்

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள டாஸ்மாக் அலுவலங்களில் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த முடிவு எட்டப்படவில்லை. இதனால் கடைகள் திறக்காமல் இருந்ததால் மது பிரியர்கள் கடைகளுக்கு முன்பு திரண்டனர்.

சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் இருந்ததால் கூட்டம் கூடியது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதுபானங்களை வாங்க ஒவ்வொரு கடைகள் முன்பும் மதுபிரியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இது குறித்து டாஸ்மாக் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:-

காலி பாட்டில்களை திரும்பப் பெறும்போது 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை இன்று செயல்படுத்த வேண்டும் என்று அவசர அவசரமாக அரசு அறிவித்தது தவறானது. கூடுதலாக ஊழியர் தேவை, காலி பாட்டில்களை ஒதுக்கி வைப்பதற்கான இடம் தேவை, அதற்கான ஒப்பந்தம் போடப்பட வேண்டும், இவற்றை எல்லாம் செய்யாமல் சூப்பர்வைசருக்கு குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பி வைத்து செயல் படுத்துமாறு கூறினால் எப்படி உடனடியாக நடை முறைப்படுத்த முடியும். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கடையி திறக்க வேண்டும் என்றும் 3 நாட்களில் எல்லாவற்றையும் சரி செய்து விடுவதாகவும் கூறினார்.

காலி பாட்டில்

ஆனால் இதை நடைமுறைப்படுத்தினால் மதுபானங்களை விற்பதற்கு காலதாமதம் ஆகும். கூட்ட நெரிசல் ஏற்படும். ஆட்கள் இல்லாமல் இந்த கூடுதல் பணியை எப்படி மேற் கொள்ள முடியும்.

அதனால் காலி பாட்டில்களை இப்போது திரும்ப பெற முடியாது என்ற அடிப்படையில் கடைகளை திறக்காமல் இருக்கின்றோம். அரசு அவகாசம் கொடுத்தால் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம்

இதற்கிடையே அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக மதுபானக் கிடங்கு முன்பாக சென்னை மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மது பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொண்டு 10 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவிந்த மதுபிரியர்கள்

ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் உள்ள மதுக்கடை திறந்து இருந்தது. இதுபற்றி அறிந்ததும் மதுபாட்டில் வாங்க ஒரே நேரத்தில் மதுபிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X