

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் கைவிடப்பட்டன. திட்டமிடாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பகுதிக்கு வெளியே செலவிடப்பட்டு உள்ளது. 2014 நிதியாண்டு முதல் 2024 வரையிலான இத்திட்டங்களில் உள்ள விலகல்களை மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கம் குறித்த செயல்திறன் தணிக்கையின் முடிவுகள் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சென்னைக்காக முதலில் திட்டமிடப்பட்ட 1366.25 கோடி ரூபாய் மதிப்புள்ளான 48 திட்டங்களில் ரூ.279.03 கோடி மதிப்பிலான 8 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
இவற்றில் நகர முன் முயற்சியின் கீழ் முன்மொழியப்பட்ட ரூ.248.47 கோடி மதிப்பிலான தெரு விளக்கு கண்காணிப்பு அமைப்பு மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும். இத்திட்டங்களை கைவிடுவதற்கு ஆவணங்களில் குறிப்பிட்ட நியாயப்படுத்தல் எதுவும் இல்லை என்று தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திட்டமிடபடாத 20 பணிகள் ரூ.189.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளை சீரமைத்தல் உயிரி வாயு ஆலை, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டை நவீனமயமாக்குதல், திறன் மிகு வகுப்பறைகள், போக்குவரத்து பூங்காக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஒரு பசுமை கட்டிடம் ஆகியவை இதில் அடங்கும்.
பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பகுதி சார்ந்த மேம்பாட்டு பகுதிக்கு வெளியே ரூ.76.32 கோடி செலவில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக மற்றும் அலுவலக செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.16.23 கோடி திசை திருப்பப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.