மாமா- மச்சான் என சட்டமன்றத்தில் பேசக்கூடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on
Summary

சட்டமன்றத்தில் மாமா- மச்சான் என்று பேசக்கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அக்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லும் காட்சிகள், ரீல்ஸ் ஆக வெளியிடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தவெக- திமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சில சமயங்களில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய வகையில் சில வார்த்தைகளை உறுப்பினர்கள் பேசி விடுகிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மாமா என்று கூறினார். இந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். சில உறுப்பினர்கள் இவ்வாறு உறவு முறை குறித்து பேசுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.

அப்போது "சட்டப்பேரவையில் மாமா, மச்சான் என்ற உறவு முறை எல்லாம் வைத்து பேசக்கூடாது" என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.

* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.

* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

நகர செயலாளர்கள்

* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.

* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

மாவட்ட செயலாளர்கள்

* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.

* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com