

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க.தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்களில், வரலாற்றைத் திரித்துத் தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
புத்தகத் தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன், இது குறித்து எழுதிய கட்டுரையின் மூலமாக இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. தவறான ஆசிரியர் பெயர்கள் மற்றும் கற்பனையான தகவல்களுடன் புத்தகங்கள் வாங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க.தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள விசாரணைக்குழு போதுமானதல்ல என்றும், முறையான விசாரணை நடத்தாமலேயே முந்தைய தி.மு.க.அரசு மீது குற்றம் சாட்டுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் புத்தக கொள்முதல் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பறிமுதல் செய்து பத்திரமாக பாதுகாக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தாமல், முந்தைய அரசின் மீது மட்டும் குற்றம் சாட்டி வருவதால், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.