இந்து மத எதிர்ப்பு அரசியலை கைவிடுகிறதா திமுக? புதிய அரசியல் பாதையை நோக்கி ஸ்டாலின்!

சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளை ஒரேடியாக இழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
 DMK Leadership Abandoning Anti-Hindu Politics?
Published on

திராவிடர் கழகத்தின் பின்னணியைக் கொண்ட தி.மு.க. பாரம்பரியமாக இந்து மத எதிர்ப்பு அரசியலைப் பின்பற்றி வந்தது. இதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தன்வசம் தக்கவைத்துக் கொண்டது.

இருப்பினும், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை த.வெ.க. பக்கம் சாய்ந்துள்ளன.

கடந்த 1999 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தபோது சிறுபான்மையினர் வாக்குகளில் சிறு சரிவு ஏற்பட்டதே தவிர, கட்சிக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. ஆனால், தற்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகாலமாக தி.மு.க.வுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த முஸ்லிம் லீக் கூட்டணி முறித்துக் கொண்டது தி.மு.க. தலைமைக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் புள்ளி விவரங்களின்படி, தி.மு.க.வின் அசைக்க முடியாத அடித்தளமாக இருந்த கிறிஸ்தவ வாக்குகளில் சுமார் 80 சதவீதமும், முஸ்லிம் வாக்குகளில் 50 சதவீதமும் த.வெ.க.விற்கு மாறியதே தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கட்சிக்குத் தோல்விகள் புதியதல்ல என்றாலும், தங்களின் அடிப்படைக் கட்டமைப்பான சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளை ஒரேடியாக இழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

எத்தகைய அரசியல் சூழலிலும் தி.மு.க.வை விட்டு கொடுக்காத காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களே, த.வெ.க. அரசைச் சிறுபான்மையினருக்கான அரசு என்றும், அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பேசத் தொடங்கியிருப்பது தி.மு.க.விற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், "த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கக் கோரி முஸ்லிம் சமூகத்திலிருந்து எங்களுக்குப் பெரும் அழுத்தம் வந்தது. விஜய் மீதான முஸ்லிம்களின் இந்த அளவிலான ஆதரவை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை." என கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் வாக்குகள் த.வெ.க. பக்கம் சென்றுவிட்ட நிலையில், தொடர்ந்து 'இந்து எதிர்ப்பு' அரசியலைக் கையில் எடுத்தால் அது அண்ணாமலைக்குச் சாதகமாக அமைந்துவிடும் என தி.மு.க. தலைமை அஞ்சுகிறது.

இதனால், வரும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் மற்றும் 2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, "எம்.ஜி.ஆர்" மற்றும் "ஜெயலலிதா" பாணியிலான 'மென்மையான' ஆன்மீக அணுகுமுறையைக் கையிலெடுக்கலாமா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க.வின் இந்த அரசியல் போக்கில் பெரிய மாற்றங்களைக் காண முடியும் என அக்கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com