

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பேச்சைக் கடுமையாகச் சாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குச் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களின் குடும்பத்தினரையும் பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசுவது சகித்துக் கொள்ள முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
திமுகவின் முன்னணி தலைவர்கள் பலர் சமீபகாலமாகக் பொதுவெளியிலும் மேடைகளிலும் பேசும்போது கண்ணியம் தவறி பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. மாற்றுக் கட்சியினரின் தாயாரைக் குறிவைத்துத் தாக்குவதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மாற்றுக் கட்சியினரின் தாயாரையும் பெண்களையும் இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பேச்சில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கடமையை திமுக தலைவர் நிறைவேற்றுவார் என்றும், இத்தகைய அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் நம்புவதாக பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.