

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள தி.மு.க. இப்போது கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக்குவதுடன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். கிளை கழகம் முதல் ஒன்றியம் வரை 2 முறை மட்டுமே அந்த பொறுப்பில் இருக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிளை செயலாளர் வயது வரம்பு 45, வட்டச்செயலாளர் வயது வரம்பு 50, பேரூர், பகுதி, நகர, ஒன்றிய செயலாளர் வயது 60-க்குள் இருக்க வேண்டும் என்றும் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய கழகம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒன்றிய செயலாளர்களின் குறிப்பிட்ட வார்டு எல்கையும் குறுகிவிடும்.
கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கிளைச் செயலாளர் பதவியும் உருவாக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்குழுவில் இதுபற்றி பேசுகையில், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்ய இருக்கிறோம். இது கடுமையானதாகத்தான் இருக்கும். சிலருக்கு கசப்பானதாக இருக்கும் என்றும் கூறிய அவர் நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது தி.மு.க.வில் சாதக-பாதகங்களை ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், தி.மு.க.வில் பேரூர் கழகம், பகுதி கழகம், நகர ஒன்றிய செயலாளர் பதவியில் இருப்பவர்களில் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்கள்தான் உள்ளனர்.
அப்படி இருக்கையில் பலருக்கு அந்த பதவி இனி கிடைக்காது என்பதால் அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதே சமயத்தில் இந்த பதவிகளுக்கு புதியவர்கள் வரும்போது கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புது ரத்தம் பாய்ச்சப்படுவது போல் வேகமாக பணியாற்றுவார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் என்று கூறுகின்றனர்.
தி.மு.க.வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கட்சியில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 110 மாவட்டச் செயலாளர்கள் பதவி உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு கட்சியில் பல்வேறு பதவிகள் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் புதிய 110 மாவட்டங்களுக்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பார். வருவாய் கோட்ட அளவில் இந்த மாவட்டங்கள் இடம்பெறும். அதன் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயற்குழு கூட்டப்படும்.
தலைமை கழகக்தின் வழி காட்டுதலின்படி 15 நாட்கள் என்ற கால வரையறைக்குள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும். அதன் பிறகு தலைமை கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இந்த பட்டியல் தலைமை கழகத்துக்கு வந்ததும் தேர்தல் நடைமுறை தொடங்கும்.
முதலில் கிளை கழகத்துக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகு வட்டம், பேரூர், பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்கும். அதன் பிறகு மாவட்டச் செயலாளர், கட்சித் தலைவர் தேர்தல் என படிப்படியாக நடக்கும்.
உட்கட்சி தேர்தல் நடந்து முடியும் வரை மாவட்டச் செயலாளர்கள் அந்த பதவியில் நீடிப்பார்கள். மாவட்டச் செயலாளர் தேர்தல் வரும்போது 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 3 முறை பதவி வகித்தவர்கள் அந்த பகுதிக்கு போட்டியிடமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.