

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு வழங்கி ஆட்சி அமைக்க உதவின. இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டன. இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர், தொழில்முறையில் கட்டிட கான்ட்ராக்டராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து, மக்கள் பணிகளிலும் சமூகப் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அதேபோல, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சுகந்தி, இடதுசாரி அமைப்புகளின் மூலம் பல்வேறு களப்போராட்டங்களை முன்னெடுத்துள்ள முதன்மை நிர்வாகியாவார். இடதுசாரி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை விரைவாக அறிவித்துள்ளதால், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணிகள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.